Latestமலேசியா

தவிக்க விட்டதால் தடுமாறிப் போன சமூகம்; 13வது மலேசியத் திட்டமே இந்தியர்களின் விதியை மாற்ற வேண்டும் -சார்ல்ஸ் சந்தியாகோ

கோலாலாம்பூ, ஜூலை-1 – இந்நாட்டின் தேச நிர்மாணிப்புக்கு உழைத்து உழைத்து ஓடாய் போன சமுதாயம் இந்தியச் சமுதாயம்…

நாடு வளர்ந்தது ஆனால் நாம் வளர்ந்தோமா? என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

இன்னமும் பல்வேறு சமூகச் சீர்கேடுகளில் சிக்கி உழன்று, மற்ற சமூகத்தை விட மிகவும் பின்தங்கியே உள்ளோம்.

குறிப்பாக இளைஞர்கள், குண்டர் கும்பல் கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றனர்.

கல்வியாளர்கள், சமூக சேவையாளர்கள், மற்றும் சிறுபான்மையினருக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர்களின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த ஆள் இருக்கிறதோ இல்லையோ, குற்றவாளிகள் மற்றும் கும்பல்களின் தலைவர்கள் இறந்தால் பள்ளி மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூட்டமாக படையெடுக்கின்றனர் என கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறியுள்ளார்.

கல்வியில், தொழில் முதலீட்டில், அரசாங்க ஒப்பந்த வாய்ப்புகளில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

“கிளிங்க்” போன்ற இழிவுசொற்கள் இதுவரைக்கும் தண்டனையின்றி பயன்படுத்தப்படுகின்றன.

ஊடகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் கூட, இந்தியர்களை குடிகாரர்கள், கும்பல் தலைவர்கள் என அழைக்கும் பாணி, பல தலைமுறைகளின் மரியாதையையும், மனஉறுதியையும் நசுக்கியது.

சற்று உள்நோக்கினால் இப்பிரச்னைகளுக்கானக் காரணங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

அதாவது இவையனைத்தும், அரசாங்கக் கொள்கை வரைவில் நமக்கு முக்கியத்துவம் இல்லாததால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் விளைவே.

இன்னும் நேரடியாகக் கூட வேண்டுமென்றால், தவிக்க விடப்பட்டதால் தடுமாறி போன சமூகம் நாம் என சார்ல்ஸ் கசப்பான உண்மையைக் குறிப்பிட்டார்.

எனவே இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வாக, வரக்கூடிய 13-ஆவது மலேசியத் திட்டத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக கல்வி மாற்றம், இளைஞர்கள் மற்றும் பெண்களின் கரங்களை வலுப்படுத்துதல், SMEs எனப்படும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் மேம்பாடு, மற்றும் நிறுவனம் சார்ந்த பொறுப்புணர்வு ஆகிய 4 முக்கிய பிரிவுகளில் உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது.

இது சிறுபான்மை சமூகத்திற்கு நாம் கேட்கும் சிறப்பு சலுகையல்ல; மாறாக இது ஒரு நீதிக் கோரல்; பல தலைமுறைகளாக ‘ஒடுக்கப்பட்டதால்’ ஏற்பட்ட சேதத்தை சரிசெய்யும் முயற்சி.

இப்போதும் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டால், இன்னொரு தலைமுறையின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்.

நாம் யாரிடமும் கெஞ்சவில்லை; அரசியல் தைரியத்திற்கு அழைப்பு விடுக்கிறோம்.

இந்திய மலேசியர்களின் உரிமை, சமத்துவம், மற்றும் நாட்டு வளர்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கும் நேரம் இது என சார்ல்ஸ் சாந்தியாகோ கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!