
பிரசல்ஸ் (பெல்ஜியம்), மார்ச்-6-ஐரோப்பிய ஒன்றியமான EU, தாவர அடிப்படையிலான உணவுப் பொருட்களுக்கு “bacon” அல்லது “steak” போன்ற இறைச்சி தொடர்பான பெயர்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க முடிவுச் செய்துள்ளது.
இது விவசாயிகளைப் பாதுகாக்கவும் உணவுப் பொருட்களின் லேபிள்கள் தெளிவாக இருக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
புதிய விதிகளின் கீழ், சைவ அல்லது vegan உணவுகள் “beef”, “pork”, “chicken”, “ribs”, “steak” போன்ற இறைச்சி சார்ந்த சொற்களைப் பயன்படுத்த முடியாது.
ஆனால் குறிப்பிட்ட சில பெயர்களின் பயன்பாடு தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு “vege burger” மற்றும் “plant-based sausages” போன்ற பெயர்களைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என, EU நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை ஆதரிப்பவர்கள், இது கால்நடை விவசாயிகளை பாதுகாக்கும் என்றும் பயனீட்டாளர்களுக்குக் குழப்பம் ஏற்படாமல் தடுக்குமென்றும் கூறுகின்றனர்.
ஆனால் உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பயனீட்டாளர் சங்கங்களை உள்ளடக்கிய விமர்சகர்களோ, தாவர அடிப்படையிலான உணவுகளுக்கும் இறைச்சிக்கும் இடையிலான வித்தியாசத்தை மக்கள் ஏற்கனவே புரிந்துகொண்டு விட்டார்கள் என்றும், இது ஒரு தேவையற்ற நடவடிக்கை எனவும் வாதிடுகின்றனர்.
எது எப்படி இருப்பினும், இப்புதிய விதி அமுலுக்கு வருவதற்கு முன், ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி ஒப்புதல் இன்னும் தேவைப்படுகிறது…



