கோலாலம்பூர், அக்டோபர் -29, நாட்டின் முக்கிய பெருநாள்களில் ஒன்றான தீபாவளியைக் காட்டிலும் வெளிநாட்டுக் கலாச்சாரமான ஹாலோவீனுக்கு (Halloween) முன்னுரிமைத் தந்துள்ள சில பேரங்காடிகளின் செயல் கண்டிக்கத்தக்கது.
MAHIMA எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் புதியத் தலைவர் டத்தோ என். சிவகுமார் அவ்வாறு கூறியுள்ளார்.
முன்பு தீபாவளிக்கு எந்தவொரு அலங்காரமும் செய்யாத பேரங்காடிகளை கண்டிருக்கிறேன்.
இப்போது, அதை விட கொடுமையாக மேலை நாட்டு கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல பேரங்காடிகளில் ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்கான அலங்காரங்கள் தூள் பறக்கின்றன.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தனித்துவ அடையாளத்தைக் கொண்ட மலேசியாவில், உள்ளூர் பெருநாட்களை ஒதுக்குவது சரியா என ம.இ.கா தேசியப் பொருளாளருமான டத்தோ சிவகுமார் கேள்வி எழுப்பினார்.
பல்லின மக்களின் கலாச்சார அம்சங்களை நாமே ஒருவருக்கொருவர் மதிக்கவில்லை என்றால், அடுத்தத் தலைமுறைக்கு ஒற்றுமையைப் பற்றி என்ன சொல்லி கொடுக்கப் போகிறோம் என்றார் அவர்.
மேலைநாட்டு மோகத்தில், இந்நாட்டுக்கு இந்தியர்கள் ஆற்றியப் பெரும் பங்கை பேரங்காடிகளின் உரிமையாளர்கள் மறந்து விடக் கூடாது.
அப்படி எங்கள் பண்டிகையை நீங்கள் புறக்கணித்தால், உங்கள் வியாபாரத்தைப் புறக்கணிக்க எங்களுக்கும் வெகுநேரம் ஆகாது என டத்தோ சிவகுமார் காட்டமாக சொல்லி முடித்தார்.
அக்டோபர் 31 தீபாவளியன்றே இம்முறை ஹாலோவீனும் கொண்டாடப்படுவதால், பல பேரங்காடிகளில் தீபாவளி அலங்காரங்களை விட அந்த மேலை நாட்டு கலாச்சார அலங்காரங்களே தூக்கலாக இருப்பதாக இந்தியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.