சியோல், அக்டோபர்-16,கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் பதற்றத்தின் அடுத்தக் கட்டமாக, தென் கொரியாவுடன் இணைக்கும் சாலைகளை வடகொரியா வெடி வைத்து தகர்த்துள்ளது.
இராணுவ எல்லையின் வடக்குப் பகுதிச் சாலைகள் வெடிக்கப்பட்டுள்ளதாக, தென் கொரியா கூறியது.
தென் கொரியாவுடன் இணைக்கப்பட்ட அனைத்து சாலைகளையும் இரயில் பாதைகளையும் முற்றிலுமாக துண்டித்து, தனது எல்லைப் பகுதியை பலப்படுத்துவதாக வட கொரியா கடந்த வாரமே அறிவித்திருந்தது.
தென் கொரியாவில் நடத்தப்பட்ட போர்ப் பயிற்சிகளுக்கும், அவ்வட்டாரத்தில் அமெரிக்க அணுசக்தி தளவாடங்கள் அடிக்கடி காணப்படுவதற்கும் பதிலடியாக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வட கொரிய இராணுவம் வெளியிட்ட அறிக்கை கூறியிருந்தது.
இந்நிலையில், ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை அனுப்பி, வட கொரியத் தலைமைக்கு எதிராக தென் கொரியா துண்டுபிரசுர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் வட கொரியா கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தது.
அதனை தென் கொரியா முதலில் மறுத்தாலும் பின்னர் கருத்துரைக்க மறுத்து விட்டது.
இதையடுத்து பதிலடி கொடுப்பது குறித்து வட கொரியத் தலைவர் கிம் ஜோங் ஆன் பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தினார்.
மீண்டுமொரு முறை வடகொரியாவில் ட்ரோன்கள் சிக்கினால், அதனைப் போர் முரசுக்கான அறிகுறியாக எடுத்துக் கொள்வோம் என அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.