
தெலுக் இந்தான், மே 6- அண்மையில் தெலுக் இந்தான், ஜாலான் சுங்கை நிபோங் இடைநிலைப்பள்ளியில், 43 மாணவர்கள் உணவு நச்சால் பாதிக்கப்பட்டதற்கு, ‘நாசி கோரேங் தொம் யாம்’காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று பேராக் மாநில மனிதவளம், சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்களின் ஆட்சிக்குழு உறுப்பினர் சிவனேசன் கூறினார்.
சம்பவத்திற்கு முந்தைய நாள், பள்ளி உணவகத்தால் வழங்கப்பட்ட தொம் யாம் நாசி கோரேங்கை உட்கொண்டதில் மாணவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டிருக்கலாம், என்று அவர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது சீராக இருந்தாலும், இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள ஹிலிர் பேராக் மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு (PKD) அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியிடப்பட்டது.
PKD ஆய்வு முடிவுகளின்படி, பள்ளி சிற்றுண்டிச் சாலையின் தூய்மையின் அளவு திருப்திகரமாக இல்லை என்பதும், பள்ளி உணவகத்தை நான்கு நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிவனேசன் கூறினார்.
இதற்கிடையில், பேராக் மாநில சுகாதாரத் துறை, நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, மாணவர்களின் ஆரோக்கியமும், பள்ளிகளில் உணவுப் பாதுகாப்பும் எப்போதும் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யும் என்று அவர் உறுதியளித்தார்.