
கோலாலாம்பூர், டிசம்பர் 22-தம்மை வீட்டுக் காவலில் வைக்கக் கோரும் முயற்சியில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் மீண்டும் தோல்வி கண்டுள்ளார்.
SRC International வழக்கில் வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் addendum கூடுதல் அரச உத்தரவு செல்லாது என, கோலாலாம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளதே அதற்குக் காரணம்.
“ஜனவரி 29-ஆம் தேதி நடந்த மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் வீட்டுத் தண்டனை குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. எனவே அந்த addendum சட்டப்பூர்வமான உத்தரவு அல்ல, அதனை அமுல்படுத்த முடியாது” என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
இதையடுத்து ஏற்கனவே ஆறாண்டுகளாகக் குறைக்கப்பட்ட சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை நஜீர் தொடர்ந்து காஜாங் சிறையிலேயே கழிப்பார்.
இந்நிலையில், நீதிமன்றத்தின் அத்தீர்ப்புக் குறித்து மேல்முறையீடு செய்யப் போவதாக நஜீப்பின் தலைமை வழக்கறிஞர் தான் ஸ்ரீ முஹமட் ஷாஃபியி அல்துல்லா கூறினர்.
தனது தண்டனையை குறைத்த பிறகு அப்போதைய மாமன்னர் இந்தக் கூடுதல் உத்தரவை வழங்கியதாகவும், எனவே அதனை அமுல்படுத்த அரசாங்கத்தை நீதிமன்றம் கட்டாயப்படுத்த வேண்டுமென்றும் எனக் கோரி நஜீப் இவ்வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
நஜீப்புக்கு வீட்டுக் காவல் அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் குறைந்தது 6 பேருந்துகளில் நஜீப்பின் ஆதரவாளர்கள் முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.



