
நாட்டில் நீண்டகாலமாக நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளதோடு , இது தேசிய கல்வி முறைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என்று கல்வி அமைச்சர் (Fadhlina Sidek) தெரிவித்தார்.
கல்வி அமைச்சு , கல்விச் சேவை ஆணையத்துடன் இணைந்து மேற்கொண்ட சீரமைப்புகளின் விளைவாக இந்த சாதனை ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டின் கல்வி வரலாற்றில் இதுபோன்ற வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறினார்.
மலேசியாவில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பான எந்தப் பிரச்னையும் இனியில்லை. பல்வேறு வழிமுறைகள் மூலம் இந்த விவகாரத்திற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம் என்று அவர் கூறினார்.
நாங்கள் நியமிக்கும் ஆசிரியர்கள் தகுதி வாய்ந்தவர்களாகவும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவர்களாகவும் இருப்பதை உறுதி செய்வதும் இதில் அடங்கும் என மலேசிய ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் நடைபெற்ற 15ஆவது பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது Fadhlina இதனைத் தெரிவித்தார்.
ஆசிரியர்ளை அதிகரிப்பது மட்டுமின்றி நாடு முழுவதிலும் ஆசிரியர்கள் நியமனத்தின்போது தரமான மற்றும் பொருத்தமானவர்களை நியமிப்பதிலும் அமைச்சின் முயற்சிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. ஆசிரியர் பணியில் பொதுமக்களின் வலுவான ஆர்வம் அதிகரித்துள்ளதால் ஆண்டுதோறும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் தேர்வு செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என அவர் கூறினார்.