ஆக்லாந்து, அக்டோபர்-24 – நியூ சிலாந்து நாட்டிலுள்ள ஒரு விமான நிலையம், பயணிகளை அனுப்பி வைக்கும் ‘பிரியாவிடை’ நேரத்துக்கு குறிப்பிட்ட நேரத்தை வரையறுத்துள்ளது.
புறப்படும் முன் அன்புக்குரியவர்களைக் கட்டிப் பிடிக்க 3 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுவதாக, மொமோனா நகரிலுள்ள டுனடின் (Dunedin) விமான நிலையத்தில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
பிரியாவிடை கொடுக்க, கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்ள விரும்பினால், கார் நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்துகிறது.
இது உலகம் முழுவதும் வலைத்தளவாசிகள் மத்தியில் சூடான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பலர், இது ஒரு மனிதநேயமற்ற நடவடிக்கை என குற்றஞ்சாட்டினர்.
மேலும் சிலரோ, இது ஒரு நல்ல யோசனை என்றும், மற்ற விமான நிலையங்களுக்கும் விரிவுப்படுத்தலாமென்றும் கூறினர்.
எனினும், அப்புதிய விதிமுறை குறித்து பொது மக்கள் கவலைக் கொள்ளத் தேவையில்லை என்கிறார் விமான நிலையத் தலைமை செயலதிகாரி.
விமான நிலையம் என்பது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான இடமாகும்.
அங்கு அன்பு ஹார்மோன்களை உருவாக்க 20 வினாடிகள் கட்டிப் பிடித்தாலே போதுமென ஆய்விலேயே கூறப்பட்டுள்ளது.
எனவே, பிரியாவிடையை விரைவுப்படுத்தி பயணிகளை அனுப்பி வைப்பதன் மூலம், மேலும் ஏராளமான பயணிகள் கட்டிப்பிடிக்க வாய்ப்பேற்படும் என அந்த CEO விளக்கம் கூறுகிறார்.