
அரிசோனா, செப்டம்பர்-23,
நெருங்கிய நண்பர்களாக இருந்து பகைவர்களாக மாறிய அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், கோடீஸ்வரர் இலோன் மாஸ்க் இருவரும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதன்முறையாக நேரில் சந்தித்துக் கொண்டனர்.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் நடைபெற்ற சார்லி கெர்க் (Charlie Kirk) நினைவேந்தல் நிகழ்ச்சியில், இருவரும் கைக்குலுக்கி பரஸ்பரம் பரிமாறிகொண்டதோடு சிறிது நேரம் பேசியப் படங்களும் வீடியோக்களும் வைரலாகியுள்ளன.
வலச்சாரி ஆர்வலரும் ட்ரம்பின் நெருங்கிய நண்பருமான சார்லி கெர்க் அண்மையில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்; அவர் உயிருடன் இருந்தபோதே, ட்ரம்ப் – மாஸ்க் இருவரும் மீண்டும் இணைவதை பெரிதும் விரும்பினார்.
ஆனால் துரதிஷ்டவசமாக அவ்விருப்பம் அவரின் நினைவேந்தல் நாளில் நிறைவேறியது…
மாஸ்க், டிரம்ப்புடன் எடுத்த புகைப்படத்தை “For Charlie” என சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
வெள்ளை மாளிகையும் அதே புகைப்படத்தைப் பதிவேற்றியது.
எனினும், அச்சந்திப்பு குறித்து ட்ரம்ப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை; “மாஸ்க் வந்து வணக்கம் சொன்னார், அவ்வளவுதான்…மற்றபடி அச்சந்திப்பு நன்றாக இருந்தது” என சுருக்கமாக அவர் குறிப்பிட்டார்.
இருவருக்கும் இடையில் அடிக்கடி மத்தியஸ்தம் செய்தவரான சார்லி கெர்க், ஒற்றுமை முக்கியம் என்பதால் அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டாமென மாஸ்க்கை முன்பு எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ‘அமெரிக்கா கட்சி’ என்ற பெயரில் புதுக் கட்சித் தொடங்கப் போவதாக மாஸ்க் முன்பு அறிவித்திருந்தாலும், இதுவரை அதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
அண்மை காலமாக அவர் ட்ரம்ப் குறித்து மீண்டும் நல்ல விதமாகவே கருத்துக்களை பதிவிட்டும் வருகிறார்.
நினைவேந்தல் நிகழ்ச்சியில், சார்லியின் மனைவி எரிக்கா – ஆண்டவரின் ஜெபத்திலிருந்து மேற்கோள் காட்டிய
“நம்மைத் தவறாக நடத்தியவர்களை மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களையும் மன்னித்தருளும்” என்ற வாசகத்தை மாஸ்க் ஆமோதித்ததும் முக்கியத்துவம் பெறுகிறது.