
சுங்கை பூலோ, ஏப் 5-சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காகத் தங்களை வெளியேற்றுவது குறித்துத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என சுங்கை பூலோவில் உள்ள நெர்சரி ( Nursery ) எனப்படும் தாவர பதிய தோட்ட நடத்துனர்கள் குழு ஒன்று முன்வைத்த குற்றச்சாட்டுகளை சிலாங்கூர் அரசு மறுத்துள்ளது.
பல ஆண்டுகளாகப் பலமுறை அறிவிப்புகள் வழங்கப்பட்டதாக சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாசிம் தெரிவித்தார்.
மாநில அரசுக்கும் நெர்சரி நடத்துனர்களுக்கும் இடையே போதிய ஈடுபாடு இல்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் , உண்மையல்ல என்பதோடு மீண்டும் மீண்டும் அறிவிப்புகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் மாநில அரசிடம் உள்ளது என்று அவர் கூறினார்.
66 நெர்சரி நடத்துனர்கள், ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான வெளியேற்றக் காலக்கெடுவை நீட்டிக்கவும், நியாயமான இழப்பீடு வழங்கவும், புதிய இடம் ஒதுக்கீடு செய்யவும் கோருகின்றனர்.
2022-ஆம் ஆண்டில், சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகமான (PKPS), பந்திங்கில் உள்ள புக்கிட் சங்காங்கில் ( Bukit Changgang )ஒரு இடத்திற்கு அவர்களை இடமாற்றம் செய்ய முன்வந்தது.
அங்கு, உள்கட்டமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, அவர்கள் குலுக்கல் முறையில் இடங்களைப் பெற்று, ஒவ்வொரு இடத்திற்கும் 600 ரிங்கிட் வைப்புத்தொகையாகச் செலுத்தினர்.
2024-ஆம் ஆண்டில், தயாராகாமல் இருந்த அந்த இடத்திற்குக் குடிபெயர்வதில் அவர்களுக்கு இன்னும் ஆர்வம் உள்ளதா என்று கேட்டு ஒரு கடிதம் வந்தது.
அந்தக் குழுவினர் தங்கள் ஆர்வத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்.இருப்பினும், பிப்ரவரி 19 ஆம்தேதியன்று PKPS அந்த சலுகையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, ஒவ்வொரு மனைக்கும் 10,000 ரிங்கிட் என்ற ஒருமுறை கருணைத் தொகையை வழங்க முன்மொழிந்தது.
இந்த விவகாரத்திற்கு தீர்வாகவும், மேம்பாலச் சாலை அமைப்பதற்கு வசதியாகவும், 66 நெர்சரி நடத்துனர்களுக்கும் இழப்பீடு வழங்க 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம்தேதியன்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு எடுத்த முடிவின்படி இந்தத் தொகை வழங்கப்பட்டது.
( Bukit Changgang )கில் முன்மொழியப்பட்ட மாற்று இடத்தில் , நெர்சரி நடத்துனர்களை அங்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அந்தப் பகுதி அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதால் அது பொருத்தமற்றதாகக் கண்டறியப்பட்டது என இஷாம் கூறினார்.



