
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28 – நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் குத்தகைகளை வழங்கும் நடைமுறை இனியும் வேலைக்கு ஆகாது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இதுவொன்றும் சுலபமான காரியம் அல்ல என்றாலும், அரசாங்கம் அதன் இலக்கில் உறுதியாக உள்ளது.
அதோடு, வேண்டியவருக்கு சலுகைக் காட்டுவது, நிதி ஒதுக்கீட்டில் கசிவு, அதிகார துஷ்பிரயோகம் போன்ற கலாச்சாரமும் துடைத்தொழிக்கப்படும் .
எனவே அனைத்து அரசுத் துறைகளும் விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென்றார் அவர்.
2025 அரசாங்க நிதி கொள்முதல் சட்ட மசோதாவை மக்களவையில் இரண்டாவது வாசிப்புக்கு விட்ட போது அன்வார் அதனைக் குறிப்பிட்டார்.
மடானி பொருளாதார முன்வரைவு மற்றும் 13-ஆவது மலேசியத் திட்டம் இதனை உறுதிச் செய்யும்.
குறிப்பாக, கோழி முட்டை, காய்கறிகள் தொடங்கி மருந்து மாத்திரைகள் வரை ஏகாபத்தியத்தை உடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
கடினமான பாதையென்றாலும் அரசாங்கம் சமரசம் காட்டாது என அவர் சொன்னார்.
இந்த 2025 நிதி கொள்முதல் மசோதா, 12 பகுதிகளையும் 93 உட்பிரிவுகளையும் கொண்டுள்ளது.
அரசாங்க நிதியைப் பயன்படுத்தி கொள்முதலை நிர்வகிப்பவர்களை முழுப் பொறுப்பேற்கச் செய்வதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.