
புத்ராஜெயா, ஜனவரி-15-பஹாங், பெந்தோங்கில் 2021-ஆம் ஆண்டு 17 வயது பெண் பிள்ளையைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டதால், 75 வயது முதியவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
வாகனமோட்டும் பயிற்சி மையத்தின் முன்னாள் பயிற்றுநருமான அவ்வாடவர், நேற்று முதல் 8 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க தொடங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை மற்றும் 3 பிரம்படி தண்டனையை வழங்கியிருந்தது.
அதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றம் போகவே, தீர்ப்பு அவருக்குச் சாதகமாய் அமைந்து விடுவிக்கப்பட்டார்.
ஆனால், அரசு தரப்பு மேல் முறையீடு செய்தது.
அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்தது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியம் நம்பத்தகுந்தது என்றும், குற்றச்சாட்டு கற்பனையல்ல என்றும் அது தீர்ப்பளித்தது.
இதையடுத்து அம்முதியவரின் குற்றத்தை உறுதிச் செய்திருந்த செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிமன்றம், நிலைநிறுத்தியது.
என்றாலும், வயது மூப்பை கருத்தில் கொண்டு, 12 ஆண்டுகள் சிறை மற்றும் 3 பிரம்படிகள் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இரத்துச் செய்தது.
அதற்கு பதிலாக 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்து அது தீர்ப்பளித்தது.



