Latestமலேசியா

பத்து மலை தைப்பூசத்துக்கு 2.5 மில்லியன் பேர் வருகைத் தரக்கூடும்

கோலாலம்பூர், ஜனவரி-25 – இவ்வாண்டு பத்து மலை தைப்பூசத் திருவிழாவுக்கு 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் வருகைத் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்கள், உள்நாட்டு – வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் மற்றும் பொது வருகையாளர்கள் ஆகியோரை அவ்வெண்ணிக்கை உட்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு தைப்பூச வாரத்தில் 4 முதல் 7 நாட்களில் சுமார் 2.5 மில்லியன் பேர் பத்து மலைக்குப் படையெடுத்தனர்.

இவ்வாண்டு நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக, கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என, ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலரும் மஹிமா தலைவருமான டத்தோ என். சிவகுமார் கூறினார்.

இவ்வாண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி தைப்பூச விடுமுறையோடு கூட்டரசு பிரதேச தினமும் ஒன்றாக வருகிறது.

இவ்வாண்டு ‘2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டு’ என்பதாலும், இம்முறை தைப்பூசம் பன்மடங்கு பாதுகாப்பாகவும், சுமூகமாவும் தூய்மையாகவும் நடைபெற வேண்டுமென தேவஸ்தானம் விரும்புகிறது.

இதற்காக, அரச மலேசியப் போலீஸ் படையுடன் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

கூட்ட நிர்வகிப்பு, இரத ஊர்வல போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் முழுமையாக கவனிக்கவுள்ளதோடு தூய்மை – துப்புரவு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்தாண்டு கிட்டத்தட்ட 3 டன் செருப்புகளும் காலணிகளும் குப்பையாக கிடந்தன; எனவே இவ்வாண்டு பக்தர்கள் முடிந்த வரை காலணிகளை கார்களிலேயே வைத்து விட்டு வருவதோ அல்லது பைகளில் போட்டு எடுத்துச் செல்லுமாறோ கேட்டுக் கொள்ளப்படுவதாக சிவகுமார் குறிப்பிட்டார்.

இவ்வேளையில், புதுப்பிப்புக்கு உட்படுத்தப்பட்டு புத்தாண்டில் மீண்டும் திறக்கப்பட்ட 140 அடி உயர் முருகன் சிலை, இவ்வாண்டு தைப்பூசத்த்தின் முக்கிய ஈர்ப்பாக இருக்குமென
எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணைக் கவரும் வகையில் புதிய விளக்குகளும் பொருத்தப்பட்டிருப்பதால், முன்பை விட அதிக கம்பீரத்துடன் முருகன் காட்சிகொடுப்பார் என நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!