
பாங்கி, அக்டோபர்-31,
சிலாங்கூர், பாங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வரும் திடலை எவருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என, ம.இ.கா முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
நூறு வருட வரலாற்றைக் கொண்ட பாங்கி தமிழ்ப்பள்ளிக்குச் சொந்தமாக திடல் இல்லாததால், மாணவர்கள் அருகிலுள்ள தோட்ட நிலத்தையே விளையாட்டு மற்றும் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்நிலம் தனியார் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் வந்ததால், அதை பள்ளிக்காகப் பெற பல முயற்சிகள் நடந்தும் தோல்வியடைந்தன.
இப்போது திடீரென அந்தத் திடலை மூடுவதற்கான நடவடிக்கைகள் அந்நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன.
அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தோட்ட முன்னாள் குடியிருப்பாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் இன்று அமைதி மறியலில் ஈடுபட்டனர்.
அதில் பங்கேற்று ஆதரவு தெரிவித்த டி. மோகன், எப்பாடு பட்டாவது அத்திடலை பாதுகாப்போம், நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோமென, வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
இதனிடையே இந்த அமைதிப் போராட்டத்தில் பங்கேற்ற மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினரும் சிப்பாங் தொகுதி நிரந்தரத் தலைவருமான டத்தோ V. குணாளன் அதே கருத்தை பகிர்ந்துகொண்டு, திடலை பாதுகாக்க உறுதிபூண்டனர்.
இந்நாட்டு இந்தியர்கள் எந்த விஷயமானாலும் போராடித்தான் பெற வேண்டியிருப்பதால், இவ்விவகாரத்திலும் போராடி சாதிப்போம் என்ற கருத்து மேலிட்டது.



