
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-14 – தனியார் பாலர் பள்ளி இயக்குநர்களுடனான அண்மையச் சந்திப்பு தேவாலயத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கல்வி அமைச்சு மறுத்துள்ளது.
அச்சந்திப்பு உண்மையில் பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் உள்ள Assumption அனைத்துலக இடைநிலைப் பள்ளி மண்டபத்தில் நடைபெற்றதாகும் என, கல்வித் தலைமை இயக்குநர் டத்தோ Dr Mohd Azam Ahmad தெளிவுப்படுத்தினார்.
அந்த மண்டபம் அப்பள்ளியின் வசதிகளில் ஒன்று மட்டுமே என்றும், அது தேவாலய வளாகம் அல்ல என்றும் அவர் கூறினார்.
இது தனியார் பாலர் பள்ளி இயக்குநர்களுடன் கல்வி தொடர்பான விவாதங்களுக்காக நடைபெற்ற சாதாரண கலந்துரையாடலே என்றார் அவர்.
எனவே, தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும், பொது மக்கள் தகவலை சரிபார்த்தே பகிர வேண்டும் என்றும் Azam கேட்டுக் கொண்டார்.
சமூக ஊடகங்களில், இச்சந்திப்பு தேவாலயத்தில் நடத்தப்பட்டதாக கூறப்பட்டதால் முன்னதாக சர்ச்சை கிளம்பியது.
“இந்த நிகழ்ச்சி இங்கு நடத்தப்பட்டுள்ளதன் மூலம் நாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணருகிறேன்; முஸ்லீம்களாகிய எங்களுக்கு கூட்டம் நடத்த இந்த புனித ரமலான் மாதத்தில் வேறேதும் பொருத்தமான இடம் கூடவா உங்களுக்குக் கிடைக்கவில்லை?” என தேவாலம் போல காட்சிளிக்கும் படங்களை பகிர்ந்து, சமூக ஊடகத்தில் பயனர் ஒருவர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
எனினும், உண்மைக்குப் புறம்பாக அக்குற்றச்சாட்டை முன்வைத்தோர் அதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் வலியுறுத்தியுள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கச் செய்து விடும் என ஃபாட்லீனா கவலைத் தெரிவித்துள்ளார்.



