
ஜோர்ஜ் டவுன், ஆகஸ்ட் 18- தற்போதைய அரசாங்கத்தின் கீழ், மலேசியர்கள் தங்கள் சமய நம்பிக்கைகளை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர் தெரிவித்துள்ளார்.
பினாங்கு மாநில இந்து சங்கத்தின் திருமுறை ஓதும் போட்டியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.
மாநில இந்து சங்கம் அதன் தலைவர் Tharman தலைமையில் திருமுறை ஓதும் விழாவை சிறப்பாக நடத்தியதோடு இந்த நிகழ்வில் 800க்கும் மேற்பட்ட சிறார்கள் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக பினாங்கு Jelutong நாடாளுமன்ற உறுப்பினருமான ராயர் கூறினார்.
ராமகிருஷ்ணா தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கலந்துகொண்ட சிறார்கள் தங்களது திறமையை வெளிப்படுத்திய நிலையில் பிள்ளைகளிடையே சமய நெறியை வளர்க்கும் இது போன்ற நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கும் வகையில் ராயர் 50,000 ரிங்கிட் மான்யம் வழங்கினார்.
மேலும் பினாங்கு இந்து அறவாரியத்தின் சார்பில் 5,000 ரிங்கிட் உதவியும் ஒதுக்கப்பட்டது. இதனிடையே, தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் 800 மலேசிய கொடியையும் வழங்கி சிறப்பித்தது.
இளைய தலைமுறையினர் ஜாலோர் கெமிலாங்கை மதிக்க வேண்டும் என்பதோடு நமது முன்னோர்களின் தியாகங்கள் மூலம் நாடு சுதந்திரம் பெற்றது என்பதை மறந்துவிடக்கூடாது என செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டபோது கேட்டுக் கொண்டார் .
ஒற்றுமையை பாதுகாப்பதன் மூலமே நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு உத்தரவாதமாக இருக்க முடியும் என அவர் நினைவுறுத்தினார்.
பினாங்கு இந்து சங்கம் மற்றும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கிடையே நெருக்கமான ஒத்துழைப்பை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இது சமூகத்திற்காக ஒன்றிணைந்து செயல்படும் இந்து அமைப்புகளிடையே ஒற்றுமையின் உண்மையான பிரதிபலிப்பாகவும் அமைவதாக அவர் கூறினார்.