
ஜோர்ஜ் டவுன் , மார்ச் 3 – பினாங்கு முழுவதும் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு 345,486.00 ரிங்கிட் ஒதுக்கீட்டில் 2,433 நாற்காலிகள் மற்றும் மேசைகள் கட்டம் கட்டமாக விநியோகிக்கப்படும்.
அவற்றில் முதல் கட்டமாக, இவ்வாண்டு பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையின் விகிதத்தின் அடிப்படையில் பினாங்கின் வடகிழக்கு , தென்மேற்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மொத்தம் 500 நாற்காலிகள் மற்றும் மேசைகள் ஒதுக்கப்பட்டாக அண்மையில் அவற்றை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ தெரிவித்தார்.
நாற்காலிகள் மற்றும் மேசைகள் போன்ற தரமான அடிப்படை வசதிகளை வழங்குவது உடல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மட்டுமல்ல, இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தில் ஒரு முக்கிய முதலீடாகும்.
வசதியான மற்றும் பாதுகாப்பான வசதிகள் மாணவர் கவனத்தை அதிகரிக்கவும், வகுப்பறை சூழலை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறையின் செயல்திறனை ஆதரிக்கவும் உதவும் என பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு குழுவின் தலைவருமான அவர் சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு பள்ளியோ அல்லது மாணவரோ கல்வி மேம்பாட்டு நடவடிக்கையிலிருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதில் பினாங்கு மாநில அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாடு இதுவாகும்.
இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதில் சிறந்த தலைமைத்துவம், உயர் அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை அடிப்படையிலான கடமைகளை நிறைவேற்றியதற்காக குழுவின் துணைத் தலைவரான குமரன் கிருஷ்ணனுக்கும் சுந்தரராஜூ தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.



