
ஜோர்ஜ்டவுன், மார்ச்-9-பினாங்கில் நில வரி உயர்வு தொடர்பான நடப்பு கணக்கீட்டு முறையை கைவிட்டு, புதிய மற்றும் நியாயமான முறைக்கு மாநில அரசு மாற வேண்டுமென, முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஈராண்டுகளில் DAP தலைமையிலான மாநில அரசு உருவாக்கிய திட்டம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
நடப்பு நில வரி கணக்கீட்டு முறையின் குழறுபடியால், ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் நில உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; மேம்படுத்தப்பட்ட அல்லது படாத நிலங்கள், பொது அல்லது தனியார் பயன்பாட்டுக்குக்கான நிலங்கள் என அனைத்தும் பாதிப்படைந்துள்ளன.
இவர்கள் அனைவருமே தேவையற்ற சுமையைச் சந்திக்கின்றனர்.
உதாரணமாக, 10 வருடம் பழைமையான மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பின் நில வரி RM 3,676 -லிருந்து RM 22,120 -மாக 5 மடங்கு உயர்ந்துள்ளது.
இதுவே பள்ளி நிலத்தின் வரி RM 2-லிருந்து RM 8,074 ஆக 4,000 மடங்கு உயர்ந்துள்ளது.
இத்தகைய அசாதாரண உயர்வுகள் சமூக நீதியை மீறுவதாக உள்ளதாக குவான் எங் சுட்டிக்காட்டினார்.
மக்கள் சார்ந்த அரசு தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்; குறிப்பாக ‘குட்டி நெப்போலியன்கள்’ எனப்படும் அதிகாரிகளை பாதுகாக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.
எனவே, சமூக நீதியை நிலைநாட்டிடும் வகையில், பொதுக் கலந்துரையாடலுக்குப் பிறகு ஒரு புதிய உருவாக்கப்பட வேண்டும் என, DAP ஆலோசகருமான குவான் எங் அறிக்கை வாயிலாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.



