பினாங்கைத் தொடர்ந்து, சிரம்பானிலும் தெரு நாய்கள் கொலை; 6 நாய்களின் உடல்கள் கண்டெடுப்பு

சிரம்பான், அக்டோபர்-30,
சிரம்பானில் தெருநாய்களுக்கு பொது மக்கள் உணவளிக்கும் வழக்கமான ஓரிடத்தில், நேற்றிரவு 6 நாய்க் குட்டிகள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவல் கிடைத்து சென்றுபார்த்த போது 6 நாய்க் குட்டிகளும் வாயில் நுரைத் தள்ளி இறந்துகிடந்ததாக, பிராணிகளுக்கு உணவளிப்பவரான ஸ்ரீ தரன் என்பவர் தெரிவித்தார்.
வாயில் நுரைத் தள்ளி சாகும் அளவுக்கு நாய்களுக்கு யாரோ விஷம் கலந்த உணவைக் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் கிளப்பினார்.
போலீஸ் மற்றும் கால்நடை சேவைத் துறையிடம் புகாரளிக்கப்பட்டு, அவர்களும் விடியற்காலை 2 மணி வரையில் வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அந்த வாயில்லா ஜீவன்களின் உயிர்போகக் காரணமாக தரப்பு கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் ஸ்ரீ தரன் வலியுறுத்தினார்.
இது போன்ற சம்பவங்களைக் காண்டு பொது மக்கள், காலம் தாழ்த்தாமல், ஊராட்சி மன்ற அதிகாரிகள், போலீஸ் மற்றும் கால்நடை சேவைத் துறையை தொடர்புகொண்டு உதவிப் பெற வேண்டுமென்றார் அவர்.
முன்னதாக, பினாங்கு பாலேக் பூலாவிலும் இதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை இரவு அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் 7 தெருநாய்கள் இறந்து கிடந்ததை அடுத்து, போலீஸிலும் கால்நடை சேவைத் துறையிடமும் புகார் அளிக்கப்பட்டது.
பெனாரா 12 (Penara 12) பகுதியில் ஒரு வருடமாக தெருநாய்களைப் பராமரித்து வரும் மீனாட்சி கண்ணன் என்பவர், மாலையில் உணவளிக்கும் போது அப்பிராணிகள் அசைவற்றுக் கிடந்ததைக் கண்டு புகாரளித்தார்.
முதலில் அதுவொரு விபத்தாக இருக்கலாம் என்று எண்ணியவர், நாய்கள் இருந்த இடத்திற்கு அருகில் விஷம் கலந்திருப்பதாக நம்பப்படும் ஒரு பிளாஸ்டிக் பை அரிசி மீட்கப்பட்டது கண்டு அதிர்ச்சியுற்றார்.
இந்நிலையில், மற்ற தெருநாய்களும் அதை உண்பதைத் தடுக்கும் வகையில் தன்னார்வலர்கள் அதை உடனடியாக அப்புறப்படுத்தியதாக மீனாட்சி கூறினார்.



