பிப்ரவரி 20-ஆம் தேதி மலாக்காவில் 11 சுற்றுலாத் தலங்களுக்கு நுழைவு இலவசம்

மலாக்கா, பிப்ரவரி-9 -மலாக்காவில் 11 சுற்றுலாத் தலங்களில் பிப்ரவரி 20-ஆம் தேதி நுழைவு இலவசமாகும்.
காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை அச்சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக, முதல் அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவுஃப் யூசோ கூறினார்.
1956-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி பண்டார் ஹிலிரில் நாட்டின் சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்டதை நினைவுக் கூறும் நாளையொட்டி, இந்த இலவச நுழைவுச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மலாக்கா மிருகக்காட்சி சாலை, மலாக்கா ரிவர் கிருய்ஸ், தாமிங் சாரி கோபுரம், மலாக்கா வொண்டர்லேண்ட் மற்றும் கேளிக்கைப் பூங்கா, மலேசிய புராதன ஸ்டுடியோ, மலாக்கா பொருட்காட்சி சாலை, ஐந்து கோல்ப் கிளப்புகள், மலாக்கா நீர் பூங்கா உள்ளிட்டவை, நுழைவு இலவசம் என அறிவிக்கப்பட்ட அந்த 11 இடங்களாகும்.
மலாக்காவில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதை எளிதாக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நகரப் போக்குவரத்தைச் சீராக்குவதும் அவற்றிலடங்கும் என்றார் அவர்.
2025 மலாக்கா மாநில மேம்பாட்டு விருது விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் முதல் அமைச்சர் அத்தகவலை வெளியிட்டார்.