பிரிமியர் லீக் நிதி விதிமீறல்: 114 குற்றச்சாட்டுகளில் மான்செஸ்டர் சிட்டி குற்றவாளி என தகவல்

லண்டன், செப்டம்பர்-26 – இங்கிலீஷ் பிரிமியர் லீக்கின் நிதி விதிகளை மீறியதாக சுமத்தப்பட்ட 115 குற்றச்சாட்டுகளில், 114-ல் மான்செஸ்டர் சிட்டி குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
The Athletic வெளியிட்ட தகவலின்படி, சுயேட்டை விசாரணைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
எனினும், மான்செஸ்டர் சிட்டிக்கு விதிக்கப்படவுள்ள தண்டனை குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
இந்த முடிவை எதிர்த்து கிளப் மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2009 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில், துல்லியமான நிதித் தகவல்களை வழங்கத் தவறியது, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான பணப் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் நிதி நிலைத்தன்மை விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மான்செஸ்டர் சிட்டி மீது சுமத்தப்பட்டிருந்தன.
ஆனால், மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.
பிரிமியர் லீக் விசாரணை நடைமுறை இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்றும், சில முக்கிய நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அது கூறிக் கொண்டுள்ளது.
தண்டனையாக புள்ளிகள் குறைப்பு, அபராதம் அல்லது பிரிமியர் லீக்கிலிருந்தே நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
இருப்பினும், இதுவரை எந்தத் தண்டனையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஆனால், 2009-2018 வரையிலான காலக்கட்டத்தில் சிட்டி வென்ற பிரிமியர் லீக் கிண்ணங்கள் பறிக்கப்பட்டால், அவை தங்களுக்குத் தான் என மான்ஸ்செஸ்டர் யுனைட்டெட் மற்றும் லிவர்பூல் ஆகிய வைரி அணிகளின் இரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்.



