கோலாலம்பூர், நவம்பர்-5 – பிலிப்பின்ஸ், லூசோனில் அந்நாட்டு போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் 21 மலேசியர்கள் கைதாகியுள்ளனர்.
அங்குள்ள சுயேட்சை துறைமுகத்தில் Calling Center என்ற பெயரில் செயல்பட்டு வந்த மோசடி அழைப்பு மையத்தில் கைதான 42 பேரில் அவர்களும் அடங்குவர்.
இணைய மோசடி, வங்கிக் கணக்கு விவரங்கள் கசிவு மற்றும் மனித விற்பனை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளதாக, புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறைக்குத் (JSJK) தகவல் கிடைத்துள்ளது.
அத்துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ ரம்லி மொஹமட் யூசோஃப் அதனை உறுதிப்படுத்தினார்.
பிலிப்பின்ஸ் தரப்புடன் தகவல் பரிமாற்றம் நடைபெறாத வரை, அந்த மோசடி கும்பலுக்கு, கைதான 21 மலேசியர்களே மூளையாக இருந்துச் செயல்பட்டார்களா என்பதை தம்மால் உறுதிபடுத்த இயலாது என்றார் அவர்.
அதே சமயம், மனித விற்பனை கும்பலால் பாதிக்கப்பட்டு, அம்மோசடி மையங்களில் வேலை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்களா என்ற கோணத்திலும் JSJK விசாரிக்குமென்றார் அவர்.
சில தினங்களுக்கு முன்னர் மணிலாவிலிருந்து 2 மணி நேர பயண தொலைவிலுள்ள மோசடி அழைப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 18 சீனப் பிரஜைகளோடு 4 மலேசியர்கள் கைதானதும் குறிப்பிடத்தக்கது.