
அலோர் ஸ்டார், ஜனவரி-15-மலேசிய எல்லைக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS, புக்கிட் காயு ஹீத்தாம் குடிநுழைவுச் சாவடியில் பெரிய அளவிலான பன்றி இறைச்சி கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளது.
நேற்று அதிகாலை 6.30 மணியளவில், ஒரு சரக்கு லாரியில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையின் போது, அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான எடை வேறுபாட்டை கவனித்தனர்.
லாரியின் மொத்த எடை 4,200 கிலோ என பதிவாகியிருந்தாலும், முழு சோதனைக்கு பிறகு அதன் நிகர எடை 2,200 கிலோ மட்டுமே இருப்பது உறுதிச் செய்யப்பட்டது.
மேலும் ஆராய்ந்த போது, 2,000 கிலோ பன்றி இறைச்சி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த இறைச்சியின் மதிப்பு சுமார் RM66,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அபாயம் காரணமாக தாய்லாந்திலிருந்து பன்றி இறைச்சி இறக்குமதி செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நினைவுப்படுத்தினர்.
இச்சம்பவம் 2011 மலேசியத் தனிமைப்படுத்தல் மற்றும் பரிசோதனை சேவைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.



