
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-23-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே உள்ள ஆலயத்திற்கு இடைஞ்சலாக இல்லாமல், அம்மருத்துவமனை இடமாற்றம் காணவிருப்பதாகக் கூறப்படுவது உண்மையல்லை.
சமூக ஊடகங்களில் அவ்வாறு பரவியிருப்பது யாரோ கிளப்பி விட்ட புரளி என, புக்கிட் மெர்த்தாஜாம் மருத்துவமனையின் வருகையாளர் வாரியம் அறிக்கையொன்றில் கூறியது.
தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம்மை தொடர்புப்படுத்தி, அந்த பொய்த் தகவல் பரப்பப்பட்டுள்ளது.
ஆனால், மத்திய அமைச்சருமான ஸ்டீவன் ஒருபோதும் அப்படி கூறவில்லை; கடந்தாண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி அக்கோயிலுக்கு வந்தபோது கூட, கோயில் தொடர்பில் எந்த விவகாரத்தையும் அவர் எழுப்பவில்லை.
நடப்புத் தேவைகளுக்கு ஏற்ப, கூடுதலாக ஒரு புளோக் கட்டடத்தை கட்டுவதற்கு மட்டுமே 2023 முதல் பரிந்துரைக்கப்பட்டது.
நடப்புக் கட்டடம் எங்கேயூம் போகாது; அங்கேதான் இருக்கும் என வாரியம் விளக்கியது.
இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகள் பொது அமைதியைக் கெடுக்கலாம்.
இதையடுத்து, அந்த அவதூறை பரப்பிய ஃபேஸ்புக் கணக்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் புகாரும் செய்யப்பட்டுள்ளது.
பொய்ச்செய்தி பரப்பியதன் பேரில் அவதூறு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க அவ்வாரியம் வலியுறுத்தியது.
நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட ஸ்ரீ தேவ மருத்துவர் ஜடா முனீஸ்வரர் ஆலயத்தின் முன்பு, குறிப்பிட்ட தரப்பினர் பேரணி நடத்த முயன்றதால் இம்மாதத் தொடக்கத்தில் அக்கோயில் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.



