வாஷிங்டன், டிசம்பர்-23 – டிக் டோக்கை இன்னும் கொஞ்ச காலத்திற்கு அமெரிக்காவில் செயல்பட அனுமதிக்க தாம் விரும்புவதாக, புதிய அதிபராகவுள்ள டோனல்ட் டிரம்ப் கோடி காட்டியுள்ளார்.
அதிபர் தேர்தல் பிரச்சாரங்களின் போது டிக் டோக்கில் தமக்கு பில்லியன் கணக்கில் views கிடைத்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
டிரம்ப்பின் இவ்வறிவிப்பு, அமெரிக்கச் சந்தையிலிருந்து டிக் டோக்கை வெளியேற்றும் முடிவில் தமக்கு உடன்பாடில்லை என்பதை தெளிவாகப் புலப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி, அமெரிக்கச் சந்தையிலிருந்து வெளியேற டிக் டோக்கைக் கட்டாயப்படுத்தும் மசோதாவை கடந்த ஏப்ரலில் அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியது.
அதாவது, சீனாவைத் தளமாகக் கொண்ட தாய் நிறுவனமான ByteDance-சிடமிருந்து ஜனவரி 19-ஆம் தேதிக்குள் பிரிந்து விட வேண்டுமென டிக் டோக்கிற்கு காலக்கெடு விதிக்கப்பட்டது.
தவறினால், அமெரிக்க App Store மற்றும் இணையத்தில் டிக் டோக் ஒரேடியாக தடைச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
அவ்வுத்தரவை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ள டிக் டோக்கிற்கு, டோனல்ட் டிரம்பின் இப்பேச்சு நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.