
கோலாலங்காட், ஏப்ரல் 22 -Jenjarom வட்டாரத்தில் பூக்கடையில் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த தாய் மற்றும் பிள்ளையை பாராங் கத்தி முனையில் மிரட்டி ஒரு கும்பல் கொள்ளையடித்துள்ளது. நேற்று மதியம் மணி 1.30 அளவில் அந்த பூக்கடைக்கு வெள்ளை நிற புரோட்டோன் காரில் வந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பூ விற்பனை செய்துகொண்டிருந்த 49 வயது பெண்மணியின் தங்கச் சங்கலியை பறித்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 4,000 ரிங்கிட் மதிப்புள்ள தங்கச் சங்கலியை இழந்த அப்பெண்ணும் அவரது பிள்ளையும் பெரும் அதிச்சிக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது 20 வயது பிள்ளையும் காயம் அடையவில்லையென கோலாலங்காட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் முகமட் சுபியான் அமின் ( Mohd Sufian Amin ) தெரிவித்தார்.
இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் தலையை மூடியிருந்ததோடு தாங்கள் வந்த காரிலேயே தப்பிச் சென்றனர். எனினும் பாதிக்கப்பட்டவர்கள் கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவு எண் பட்டையை கவனிக்கவில்லை. இந்த கும்பலை தேடும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர் என முகமட் சுபியான் கூறினார். இதற்கு முன்னதாக சிசிடிவியில் ஆயுதம் ஏந்திய கொள்ளைக் கும்பல் கொள்ளையிடும் காட்சியைக் கொண்ட மூன்று காணொளிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின.