
சான் பிரான்சிஸ்கோ, ஆகஸ்ட்-15- YouTube-பில் பெரியவர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்யும் குழந்தைகளைக் கண்டறிய அந்த வீடியோ பகிர்வுத் தளம் AI அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. தொடக்கமாக, அமெரிக்காவில் இப்புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பார்த்த வீடியோக்களின் வகைகள் மற்றும் YouTube கணக்குகளின் நீண்ட ஆயுள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் பயனர்களின் வயதைக் கணக்கிட இயந்திர கற்றல் எனப்படும் AI-யின் பதிப்பு பயன்படுத்தப்படுகிறது.
கணக்கில் உள்ள பிறந்தநாளைப் பொருட்படுத்தாமல், இந்த தொழில்நுட்பம் ஒரு பயனரின் வயதைக் கணித்து, அவரின் வயதுக்கு ஏற்ற உள்ளடக்கங்களையும் பாதுகாப்பான அனுபவங்களையும் வழங்குமென, YouTube இளைஞர் உள்ளடக்க மேலாண்மை இயக்குனர் ஜேம்ஸ் பெசர் (James Beser) கூறினார்.
இதனை சிறிது காலமாகவே மற்ற சந்தைகளில் பயன்படுத்தி வருவதாகவும், எதிர்பார்த்தபடியே அது சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் சொன்னார்.
சுருங்கக் கூறின், பயனர் வயதைத் தோராயமாகக் கணக்கிடும் இந்தத் தொழில்நுட்பமானது ஏற்கனவே உள்ள வயது மதிப்பீட்டு மாதிரியை மேம்படுத்துகிறது.
அவ்வகையில், அவர்கள் வயதுக் குறைந்தவர்கள் என YouTube நம்பினால், பயனர்களுக்கு அது குறித்து அறிவிக்கப்படும்; சம்பந்தப்பட்டவர்கள், கடன் பற்று அட்டை, செல்ஃபி அல்லது அடையாள அட்டை மூலம் அவர்களின் வயதை உறுதிச் செய்யும் தேர்வும் அவர்களுக்கு வழங்கப்படும்.
சமூக ஊடகத் தளங்கள் குழந்தைகளின் நல்வாழ்வைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக உலகளவில் தொடர்ந்து குற்றம் சாட்டப்படும் நிலையில், வயதுக்கு மீறிய உள்ளடக்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் YouTube இறங்கியுள்ளது வரவேற்கப்படுகிறது.