
கோத்தா பாரு, நவம்பர் 19 – கோத்தா பாரு பகுதியில் நடைபெற்ற ஐந்து கொள்ளைச் சம்பவங்களின் தலையாக இருந்து செயல்பட்டு வந்த போசார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
43 வயதான சந்தேக நபர், முன்பு போதைப்பொருள் குற்றத்தில் சிக்கி பணியிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கோத்தா பாருவில் உள்ள ஆடை கடை ஒன்றில் நடந்த கொள்ளையைப் பற்றிய புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று கிளாந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமாட் (Mohd Yusoff Mamat) தெரிவித்தார்.
பின்னர் நடைபெற்ற விசாரணையில், அந்த போலீஸ் இந்த ஆண்டில் நடந்த ஐந்து கொள்ளைச் சம்பவங்களிலும் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
மேலும் சிறுநீர் பரிசோதனையில் அந்நபர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது. வணிக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு, பொய்யான துப்பாக்கியை காட்டி பயமுறுத்துவதன் வழி அக்கொள்ளைகளை நடத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து போலி துப்பாக்கி, போதை மாத்திரைகள், பாதுகாப்புத் தொப்பி மற்றும் கைக்கடிகாரம் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



