
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-18- மேற்படிப்புகளில் 4 CGPA புள்ளிகளைப் பெறுவதென்பது சாதாரண விஷயமல்ல; ஆனால் ஒருவர் 6 செம்ஸ்டர்களாக தொடர்ந்தார்போல் 4 CGPA புள்ளிகளைப் பெற்றிருக்கின்றார் என்றால் நம்ப முடிகிறதா?
கோலாலம்பூர் பந்தாய் டாலாமைச் சேர்ந்த ஒரு லாரி ஓட்டுநரான குணசேகரன் மற்றும் கேட்டரிங் தொழில் செய்யும் அமிர்தம் தம்பதியின் 23 வயது புதல்வர் கிஷேந்திரனே அச்சாதனைக்குச் சொந்தக்காரர்.
மலாக்கா மெர்லிமாவ் பாலிடெக்னிக் தொழில் பயிற்சிக் கல்லூரியின் அண்மையப் பட்டமளிப்பு விழாவில், கணக்கியல் துறையில் அவர் டிப்ளோமா பட்டம் பெற்றார்.
அதோடு, கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கையில் சிறந்தத் தேர்ச்சிக்கான விருதையும் கிஷேந்திரன் வென்றார்.
அவரை வணக்கம் மலேசியா நேயர்களுக்காக பேட்டிக் கண்ட போது, கொஞ்சம் யோசிக்காமல் தனது வெற்றிக்கு முக்கியக் காரணமே தனது பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் என நன்றிக் கூறினார்.
6 பிள்ளைகளில் மூன்றாமவரான இவர், ஜாலான் பங்சார் தமிழ்ப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி, விவேகானந்தா இடைநிலைப் பள்ளியில் முடித்தார்
என்ன கஷ்டப்பட்டாலும் எதிர்காலத்தில் பிள்ளைகள் கடனில்லாமல் வாழ வேண்டும் என்ற நோக்கில் தனது பெற்றோர் தங்களை அர்ப்பணித்ததாக கிஷேந்திரன் சொன்னார்.
வெற்றிக்கான இரகசியம் குறித்து கேட்ட போது, அயராத உழைப்பையே அவர் காரணமாகக் கூறினார்.
காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்து படிப்பதை வழக்கமாகக் கொண்டு, எழும் சந்தேகங்களையும் உடனுக்குடன் விரைவுரையாளர்களிடம் கேட்டுத் தெளிவுப்பெற்றுள்ளார்.
சிறந்தத் தேர்ச்சியைப் பெறுவதற்கு நண்பர்களும் சீனியர்களும் ஊக்கமும், ஆதரவும் வழங்கியதையும் இவர் மறக்கவில்லை.
கல்வி மட்டுமின்றி புறப்பாட்டத்திற்கும் சம அளவில் முக்கியத்துவம் வழங்கி இவர் சாதித்துள்ளார்.
அடுத்து கணக்கியல் துறையில் இளங்கலைப் பட்டப் படிப்பைத் தொடர எண்ணியுள்ள கிஷேந்திரன், இன்று கஷ்டப்பட்டால் நாளை நமது எதிர்காலம் சிறக்குமென, தம்மைப் போல் சாதிக்க விரும்புவோருக்கு அறிவுரைக் கூறுகிறார்.
UPU முடிவுகளுக்குக் காத்திருக்கும் வரையில் நேரத்தை வீணடிக்காமல் தற்காலிகமாக வேலை செய்து வரும் கிஷேந்திரன், அதில் கிடைக்கும் வருமானத்தைப் சேர்த்து வைத்து பின்னர் மேற்படிப்புக்கான செலவுக்குக் பயன்படுத்த எண்ணியுள்ளார்.