
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-30 – நாட்டின் 68-ஆவது தேசிய தின கொண்டாட்டங்களை மேலும் சிறப்பூட்டும் வகையில், ம.இ.கா இளைஞர் பிரிவு “என் நாடே என் சுவாசமே” என்ற தலைப்பில் சுதந்திர தின கவிதைப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர்களின் ஒத்துழைப்போடு இப்போட்டி நடைபெறுவதாக, ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் கூறினார்.
இளையோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் நாட்டுப் பற்றை விதைக்கும் நோக்கிலும் தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தை தூண்டவும் இப்போட்டி ஏற்பாடு செய்யப்படுவதாக அவர் சொன்னார்.
பொதுப் பிரிவு, பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள் பிரிவு, இடைநிலைப் பள்ளி மாணவர்கள் என 3 பிரிவுகளில் இப்போட்டி நடத்தப்படுகிறது.
ஒருவர் ஒரு பிரிவில் ஒரு கவிதை மட்டுமே அனுப்ப முடியும் என்பது உள்ளிட்ட போட்டி விதிமுறைகளை ஆசிரியர் குகன் தியாகராஜன் அறிவித்தார். வெற்றியாளர்களுக்கு 1,000 ரிங்கிட் பரிசும், இரண்டாம் நிலையில் வருபவர்களுக்கு 700 ரிங்கிட்டும், மூன்றாமிடத்தைப் பிடிப்பவர்களுக்கு 500 ரிங்கிட்டும் வழங்கப்படும்.
அதோடு 3 பேருக்கு 100 ரிங்கிட் ஆறுதல் பரிசும் உண்டு. கவிதைகளை அனுப்புவதற்கு கடைசி நாள் செப்டம்பர் 21-ஆம் தேதியாகும். மேல் விவரங்களுக்கு திரையில் காணும் எண்களில் மகாதேவன் அல்லது நவீந்திரனை தொடர்புகொள்ளலாம்.