
புது டெல்லி, பிப்ரவரி-16 – மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இந்தியத் தலைநகர் புது டெல்லியில் உள்ள இரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 4 குழந்தைகள், 11 பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.
கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் செல்ல வேண்டிய 2 இரயில்கள் தாமதமாக வந்ததே, மோசமான கூட்ட நெரிசலுக்குக் காரணமென போலீஸார் கூறினர்.
இரயிலைப் பிடிப்பதற்காக பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஓடியதில் மூச்சுத் திணறல் காரணமாக மயங்கி விழுந்தும் மிதிபட்டும் 15 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்;
மேலும் மூவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கூட்ட நெரிசலைச் சமாளிக்க 4 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக இரயில்வே துறை தெரிவித்தது.
இவ்வேளையில் அத்துயரச் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்பதாகவும் X தளத்தில் மோடி தெரிவித்தார்.