
ஜாசின் , ஏப் 5 -ஜாசின், சிம்பாங் கெராயோங்கில் இன்று அதிகாலை நிகழ்ந்ததாக நம்பப்படும், வேன் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்திற்கு அருகில், வாகனத்தின் ஓட்டுநர் என நம்பப்படும் ஒருவர் தள்ளாடுவதைக் காட்டும் 22 வினாடிகள் கொண்ட காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்த சம்பவம் குறித்து தங்களது தரப்பிற்கு தொடக்கக் கட்ட அறிக்கை எதுவும் கிடைக்கவில்லையென ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் லீ ராபர்ட் தெரிவித்தார்.
இருப்பினும் முகநூலில் வைரலாகப் பரவிய அந்தக் காணொளியை கண்டறிந்தவுடன் போலீஸ் விசாரணையை தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.
இன்று அதிகாலை, ஜாசின் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போக்குவரத்து அதிகாரிகள் குழு ஒன்று, காணொளியின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட இடத்திற்கு விரைந்த போதிலும் சம்பந்தப்பட்ட ஓட்டுநரும் வாகனமும் அங்கிருந்து சென்றுவிட்டதைக் கண்டறிந்தனர்.
அந்த நபர் ஓட்டிச் சென்ற வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து கிடப்பது காணப்பட்டதோடு அந்த வீடியேவை பதிவுசெய்தவர் என்று நம்பப்படும் ஒரு பெண்ணின் குரலும் கேட்கிறது.
சம்பவத்தின் போது அந்த வேன் ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக அவர் கூறுகிறார்.
காலை 10 மணி நிலவரப்படி, அந்தப் பதிவு சமூக ஊடகத் தளங்களில் 1,600-க்கும் மேற்பட்ட எதிர்வினைகளையும், 579 கருத்துகளையும் பெற்று, 741 முறை பகிரப்பட்டிருந்தது.
அதோடு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.



