
கோலாலம்பூர்,அக்டோபர்-2 – இஸ்ரேலியப் படைகள் தடுத்து வைத்துள்ள Global Sumud Flotilla மனிதநேய உதவிக் கப்பல் பயணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென ம.இ.கா வலியுறுத்தியுள்ளது.
காசா நோக்கி மனிதநேய உதவிகளை கொண்டு சென்ற அந்தக் கப்பல், அனைத்துலக கடல்பரப்பில் தடுக்கப்பட்டதை கடுமையாகக் கண்டித்த அக்கட்சியின் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன், இது அனைத்துலக சட்டத்தின் மீதே கேள்விக்குறியை எழுப்புவதாக சாடினார்.
எனவே, அரச தந்திர உறவில் உலக அரங்கில் மதிக்கப்படும் நாடு என்ற வகையிலும், மலேசியாவின் உலகளாவிய தலைமையையும் பயன்படுத்தி, கைதான மனிதநேய தன்னார்வலர்களை நிபந்தனையற்ற முறையில் விடுவிக்க, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நடவடிக்கை எடுக்க வேண்மென, அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், ஐநா சபை மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பான OIC உள்ளிட்ட தளங்களில் வலுவான நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தை அவர் வலுயுறுத்தினார்.
மனிதநேய முயற்சிகள் குற்றமாக்கப்படக் கூடாது என்பதுடன், உதவி எந்தத் தடையும் இல்லாமல் காசா மக்களிடம் போய் சேர வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு, ம.இ.கா வெளிப்படுத்துவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
காசா மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துகள் போன்றவற்றைக் கொண்டுச் சென்ற Flotilla கப்பல்களை, இஸ்ரேல் இன்று அதிகாலை முரட்டுதனமாகத் தடுத்து நிறுத்தியது.
அதிலிருந்த 23 மலேசியர்களில் இதுவரை 12 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது.
மலேசியர்களை விடுவிக்காமால் போனால் இஸ்ரேலை சும்மா விட மாட்டோம் என, டத்தோ ஸ்ரீ அன்வார் முன்னதாக திட்டவட்டடமாகக் கூறியிருந்தார்.