
திருவனந்தபுரம், செப்டம்பர்-21,
ஒரு முஸ்லீம் ஆண் தன் மனைவிகளைப் பொருளாதார ரீதியாக பராமரிக்க முடியாவிட்டால், பலதார திருமணங்களுக்கு மதச்சட்டத்திலேயே இடமில்லை என, கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.
கண்பார்வையற்ற தனது 46 வயது கணவரிடமிருந்து 10,000 ரூபாய் மாதாந்திர செலவுத் தொகைக் கோரி மனுத் தாக்கல் செய்த 39 வயது மனைவியின் வழக்கில், நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.
பிச்சை எடுத்து வாழ்வதே தொழில் என்றாலும், கணவர் தனது இரண்டாவது மனைவியை அடித்து மிரட்டி மூன்றாவது திருமணம் செய்வதாக கூறியிருக்கிறார்.
இந்நிலையில் “பிச்சைப் பாத்திரத்தில் கை வைக்க வேண்டாம்” என்ற மலையாள சொற்றொடரை மேற்கோள் காட்டிய நீதிபதி, அத்தகைய கணவரிடம் உயிர் வாழ்வை எதிர்பார்ப்பது பயனற்றது எனக் கூறினார்.
முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மனைவிக்கு நியாயமாக நடந்து கொள்ள முடிந்தால் மட்டுமே பலதார திருமணங்கள் அனுமதிக்கப்படும் என்ற, புனித குர்-ஆன் வசனங்களையும் நீதிபதி மேற்கோள் காட்டினார்.
உண்மையில், பெரும்பாலான முஸ்லீம்கள் குர்-ஆன் உணர்வுக்கு ஏற்ப monogamy எனும் ஒரே மனைவி நடைமுறையை பின்பற்றுகிறார்கள் என்பதையும் நீதிபதி சுட்டிக் காட்டினார்.
ஏழைகளிடையே பலதார திருமணங்கள் அதிகமாக இருப்பதற்கு, கல்வியறிவுக் குறைவும் விழிப்புணர்வு இல்லாமையுமே காரணமாக உள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாப்பது சமூகம், மதத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார்.