மலாக்கா, டிசம்பர்-12, மலாக்கா, குவாலா லிங்கியில் உள்ள மலேசிய மீன்வள மேம்பாட்டுத் துறை அலுவலகத்தின் கால்வாயில், 200 கிலோ எடையிலான ஒரு பெரிய உப்புநீர் முதலை பிடிபட்டுள்ளது.
கால்வாயில் முதலை சிக்கிக் கொண்டதாக நேற்று காலை 7 மணியளவில் வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னுக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடம் விரைந்த அதிகாரிகள், பொது தற்காப்புப் படை உதவியோடு 3.3 மீட்டர் நீளமுள்ள அந்த ஆண் முதலையைப் பிடித்தனர்.
சுங்கை லிங்கி ஆற்றிலிருந்து வந்திருக்கலாமென நம்பப்படும் அம்முதலையின் உடல் நிலை சீராக உள்ளது.
எனினும் பிடிபட்ட போது அதற்கு காயமேதும் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய மேற்கொண்டு சோதனைகள் நடத்தப்படுமென PERHILITAN அதிகாரிகள் கூறினர்.