
மலாக்கா, மார்ச்-17-மலாக்கா, பத்து பெரண்டாம் மொத்த சந்தைப் பகுதியில் வாகன நிறுத்துமிடக் கட்டணமாக அநியாயத்திற்கு 183 ரிங்கிட் 38 சென் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் சமூக ஊடகங்களில் கட்டண இரசீதை பதிவேற்றியதை அடுத்து அது வைரலானது.
வாகன நிறுத்துமிடத்திலிருந்து வெளியேறும் போது கட்டணம் முதலில் RM2.12 என காட்டியதாகவும், கணவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி அதனைச் செலுத்த முயன்ற போது கணினி கோளாறால் அது முடியாமல் போனதாகவும் அவர் கூறினார்.
பிறகு வேறு அட்டையைப் பயன்படுத்தியபோது RM183.38 கணக்கிலிருந்து வெட்டப்பட்டதால் அம்மாது அதிர்ச்சியடைந்தார்.
மற்ற வாகனங்களும் இதே பிரச்னையை எதிர்நோக்கியதாகவும், இப்படி நடப்பது இது முதன் முறை அல்ல என்றும் அவர் அதிருப்தியை வெளியிட்டார்.
இந்நிலையில், அப்புகாரை விரைந்து விசாரிக்குமாறு ஹங் துவா ஜெயா நகராண்மைக் கழகத்திற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
“RM183 என்பது அநியாயமானக் கட்டணம்; கணினி கோளாறால் இது ஏற்பட்டிருக்கலாம் என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது” என ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ Rais Yasin கூறினர்.
இந்நிலையில், கட்டணம் தவறாக வசூலிக்கப்பட்டது என விசாரணை முடிவில் கண்டறியப்பட்டால், அப்பெண்ணுக்கு பணம் திருப்பி வழங்கப்படும் என்றார் அவர்.



