ஷா ஆலாம், டிசம்பர்-1,பெர்சாத்து கட்சிக்கு மலாய்க்காரர் அல்லாதோரின் ஆதரவைத் திரட்டுவது சாதாரண விஷயமல்ல.
அதுவொரு பெரும் சவால் என்பதை, பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான Bersekutu பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர். சஞ்சீவன் ஒப்புக் கொண்டுள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் பாஸ் கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவதால், பெர்சாத்து மீது ஒரு தவறான கண்ணோட்டம் நிலவுவதும் அதற்கு முக்கியக் காரணம்.
மற்ற இனம் சார்ந்த கட்சிகளைக் போலவே பாஸ் கட்சியும் அதன் கொள்கைக்கேற்ப போராடுகிறது.
ஆனால் அரசியல் ஆதாயத்துக்காக அதை மட்டும் சர்ச்சையாக்கி சில தரப்புகள் குளிர்காய்கின்றன.
இந்த தவறான கண்ணோட்டம் நிலைக்காது; எப்படியும் ஒரு கட்டத்தில் மலாய்க்காரர் அல்லாதோரின் நம்பிக்கையே பெற்றே தீருவோம் என சஞ்சீவன் திடமாகக் கூறினார்.
தற்போது Bersekutu பிரிவில் 30,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
குறுகிய காலத்தில் அவ்வெண்ணிக்கை சாத்தியமாகியிருப்பது மகிழ்ச்சி என்றாலும், கண் முன்னே நீண்ட நெடிய பயணம் இருப்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
இன்னும் ஏராளமானோரைக் கட்சியில் இணைக்க வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.
பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினராக தாம் நியமிக்கப்பட்டிருப்பதே, அக்கட்சி அனைவரையும் அரவணைத்துச் செல்வதற்கு ஓர் உதாரணம் என்றார் அவர்.
ஷா ஆலாமில் நடைபெற்ற பெர்சாத்து கட்சியின் ஆண்டு பொதுப்பேரவைக்குப் பிறகு Malaysia Gazette-க்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் அவ்வாறு சொன்னார்.
முன்னதாக அம்மாநாட்டைத் தொடக்கி வைத்து கொள்கையுரையாற்றிய அதன் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின், பெர்சாத்துவை ஆதரிக்க மலாய்க்காரர் அல்லாதோர் இன்னமும் தயக்கம் காட்டுவதாகக் கூறினார்.
அவர்களின் ஆதரவின்றி மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றுவது கடினமென்பதை அவர் ஒப்புக் கொண்டார்.