
சைபர்ஜெயா, நவம்பர்-6,
தென்கிழக்காசியாவின் முதல் மேம்பட்ட சிப் சோதனை மையத்தை அமைத்து மலேசியா சாதனைப் படைத்துள்ளது.
இன்று Cyberjaya-வில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியும் அதில் கலந்துகொண்டார்.
இந்த Advanced Chip Testing Centre மையம், மலேசியாவை ஒப்பந்த சிப் உற்பத்தியாளரிலிருந்து, உள்ளூர் சிப் வடிவமைப்பாளராக மாற்றும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.
சிப் ஆய்வு, வடிவமைப்பு, சோதனை மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றுக்கான உயர்தர வசதிகளை இம்மையம் கொண்டுள்ளது.
Arm, Synopsys, AWS, Keysight, IIT Madras உள்ளிட்ட உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இதில் பங்கெடுத்து ஆராய்ச்சி ஆய்வூக் கூட சூழலை உருவாக்கவிருக்கின்றன.
சைபர்ஜெயா, தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக உள்ள நகரமாக இருப்பதால், அதுவே இத்திட்டத்திற்கு தகுந்த இடமாக இருக்குமென்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அங்கு அமைக்கப்படும் ASEM எனப்படும் மேம்பட்ட செமிகண்டக்டர் மலேசியப் பயிற்சி மையம், அடுத்த 10 ஆண்டுகளில் 20,000 செமிகண்டக்டர் பொறியியலாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படும்.
இவ்வேளையில் சிலாங்கூர் மாநில அரசாங்கம், RM100 மில்லியன் முதலீட்டுடன் சிலாங்கூர் செமிகண்டக்டர் நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய தொழில்நுட்ப வளர்ச்சி கொள்கை மூலம், ஒவ்வொரு புதிய தரவுக் கூடத்திலும் 30% உள்ளூர் உள்ளடக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



