கோலாலம்பூர், டிசம்பர்-22, கிளந்தான் சுங்கை கோலோக் வழியாக சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க போலீஸ் தொடர்ந்து தடை விதிக்கும்.
அதனால் ஏமாற்றமடையும் தரப்பினரின் மிரட்டல்களுக்கு அடிபணியப் போவதில்லை என, தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
சட்டத்திற்குட்பட்டே அத்தடை விதிக்கப்பட்டது; அது பின்பற்றப்படுவதை உறுதிச் செய்ய வேண்டியது போலீசாரின் கடமையென்றார் அவர்.
எனவே எந்தவொரு மிரட்டல்களுக்கும் நாங்கள் பயப்படவில்லை; நாங்கள் முழு விழிப்பு நிலையில் உள்ளோம்; உளவு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டிருப்பதாக IGP சொன்னார்.
டிசம்பர் 1 முதல் மலேசிய-தாய்லாந்து எல்லையைக் கடக்க சட்டவிரோத் தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படதிலிருந்து, தங்களுக்கு ஏராளமான மிரட்டல்கள் வருவதாக கிளந்தான் போலீஸ் முன்னதாகக் கூறியிருந்தது.
அவ்வாறு செய்வோர் இதுநாள் வரை குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் கைதுச் செய்யப்பட்டு வந்தனர்.
மலேசியா – தாய்லாந்து எல்லையில் நாட்டின் அதிகாரப்பூர்வ நுழைவாயில்களாக இருப்பது Rantau Panjang, Bukit Bunga மற்றும் Pengkalan Kubor-ரில் உள்ள ICQS எனப்படும் குடிநுழைவு, சுங்க, தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகம் மட்டுமே என உள்துறை அமைச்சு கடந்த மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.