
கோலாலம்பூர், டிசம்பர்-11 – இந்தியர்களின் கரங்களை வலுப்படுத்தும் மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் கடப்பாடு மாறவில்லை… இனி என்றும் மாறாது என, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார்.
இவ்வாண்டு பிரதமர் 34 இந்தியச் சமூக–அரசியல் மேம்பாட்டு திட்டங்களை RM100 மில்லியன் ஒதுக்கீட்டுடன் அங்கீகரித்துள்ளார்.
இதில் கல்வி, நலத்திட்டங்கள், இளைஞர் மேம்பாடு, TVET தொழில் பயிற்சி, அடிப்படை வசதிகள், பரம ஏழ்மை ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய முயற்சிகள் அடங்கும் என்றார் அவர்.
தர்மா மடானி, தமிழ்ப் பள்ளிகளுக்கான தளவாட மற்றும் உபகரண உதவிகள், B40 தோட்டத் தொழிலாளர்களுக்கு one-off நிதியுதவி, டையாலிசிஸ் மானியம், கல்வி மடானி இலவச டியூஷன் வகுப்புகள், தமிழ்ப் பாலர் பள்ளிகளுக்கான மானியம் உள்ளிட்டவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
மித்ராவின் ஒவ்வொரு ரிங்கிட்டும் இந்தியச் சமூகத்திற்கே செலவிடப்படும்; வெளிப்படைத்தன்மைக்காக அனைத்து பெறுநர்களின் பட்டியலும் மித்ரா இணையதளத்தில் வெளியிடப்படும் என, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
எனவே இந்தியர்களுக்கான மித்ராவின் கடப்பாடு மாறவில்லை; அச்சமூகத்தின் குரலும் எதிர்காலமும் எப்போதும் அரசாங்கத்தின் முன்னுரிமை என அவர் உத்ரவாதமளித்தார்.
நாடாளுமன்ற மேலவையில், 2026 பட்ஜெட் விவாதங்களுக்கு பிரதமர் சார்பில் மித்ரா குறித்து விளக்கமளித்த போது ரமணன் அவ்வாறு கூறினார்.



