
புத்ராஜெயா, ஜூலை-30- இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் கீழ் இவ்வாண்டு இதுவரையில் 16 உயர் தாக்கத் முன்னெடுப்புகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இன்று வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் அலுவலகம் அதனை உறுதிப்படுத்தியது.
அங்கீகரிக்கப்பட்ட இத்திட்டங்கள், கல்வி மற்றும் பயிற்சிகள், ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம், சமூக நல்வாழ்வு ஆகிய 3 அம்சங்கங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன.
நாட்டின் வளர்ச்சியில் இந்தியச் சமூகத்தையும் அரவணைத்துச் செல்லும் மடானி அரசாங்கத்தின் தொடர்ச்சியான கடப்பாடுகளுக்கு ஏற்ப இது அமைகிறது.
அதே சமயம், குறிப்பிட்ட சில திட்டங்களை அங்கீகரிக்க முடியாமல் போயிருப்பதையும் பிரதமர் அலுவலகம் சுட்டிக் காட்டியது.
TVET எனப்படும் தொழில்கல்வி மற்றும் தொழில்பயிற்சி தொடர்பான முன்னெடுப்பும் அவற்றிலடங்கும்; அது தேசிய TVET மன்றத்தின் அதிகாரத்தின் கீழ் வருவதே காரணமாகும்.
இது தவிர, ஏற்கனவே சில அமைச்சுகளின் கீழ் உள்ள திட்டங்களை ஒத்திருப்பதாலும் சில முன்னெடுப்புகள் நிராகரிக்கப்பட்டன.
இளைஞர் -விளையாட்டுத் துறை அமைச்சு, சுகாதார அமைச்சு, தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சு உள்ளிட்டவை அவ்வமைச்சுகளாகும்.
ஓரே மாதிரியான திட்டங்களைத் தவிர்க்கவும், வளங்களை விவேகமாகக் கையாளவும் அவை நிராகரிக்கப்பட்டதாக பிரதமர் துறை தெளிவுப்படுத்தியது.
இந்தியச் சமூகத்துக்கான மேலும் சில வியூகத் திட்டங்கள் விரைவிலேயே பரிசீலிக்கப்பட்டு, அமுலாக்கங்களும் மதிப்பிடப்படும்.
அரசாங்க அனுகூலங்களை இந்தியச் சமூகம் நியாயமாகவும், சமமாகவும், தொடர்ச்சியாகவும் பெறுவதை மடானி அரசாங்கம் தொடர்ந்து உறுதிச் செய்யுமென்றும் பிரதமர் அலுவலகம் கூறியது.