
வாஷிங்டன், பிப்ரவரி-22-அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், உலகளாவிய இறக்குமதி பொருட்களுக்கு 15% வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
10% வரி விதிக்கப் போவதாக வெள்ளிக்கிழமைக் கூறியிருந்த நிலையில் ஒரே நாள் இடைவெளியில், அதனை மாற்றி 1974‑ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச 15% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார்.
இச்சட்டத்தின் கீழ், அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதல் பெறுவதற்கு முன் சுமார் 5 மாதங்கள் வரை இந்த வரி அமுலில் இருக்கும் என்றார் அவர்.
ட்ரம்ப் தனது அதிகாரத்தை மீறி 1977‑ஆம் ஆண்டின் அவசர சட்டத்தை பயன்படுத்தி முந்தைய வரிகளை விதித்ததாக, அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு 6–3 வாக்குகளில் முன்னதாக அதிரடியாகத் தீர்ப்பளித்தது.
இதனால் சினமடைந்த ட்ரம்ப், நீதிபதிகள் தேசப்பற்று இல்லாதவர்கள் என கடுமையாகச் சாடினார்.
ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பால் ஏற்கனவே 130 பில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இப்புதிய வரிகள், பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகத் தலைவர்கள், இது பயனீட்டாளர்களுக்கும் உலகளாவிய வளர்ச்சிக்கும் பாதகமாக இருக்கும் என எச்சரிக்கின்றனர்.
ஆனால் ட்ரம்ப்போ வழக்கம் போல், இந்த வரிகள் அமெரிக்க உற்பத்தியை ஊக்குவிக்கும் எனக் கூறி சமாளித்து வருகிறார்.



