
ஜோகூர் பாரு, ஜூலை 12 – ஜோகூர் சட்டமன்றத் தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகள் நேற்றிரவு வெளியாகும் முன்பே, புதிய மாநில அரசு திங்கட்கிழமைக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைத்தளங்களில் அதிகரித்ததைக் காண முடிந்தது.
ஃபேஸ்புக், டிக் டோக் மற்றும் X உள்ளிட்ட தளங்களில், தேர்தல் பணிகள் மற்றும் வாக்களிப்பு நாளுக்குப் பிறகு பொது மக்கள் ஓய்வெடுக்க ஒரு நாள் விடுமுறை வழங்குமாறு பலர் நகைச்சுவையுடனும் எதிர்பார்ப்புடனும் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
“யார் ஆட்சி அமைத்தாலும் பரவாயில்லை, திங்கட்கிழமை விடுமுறை கிடைத்தால் போதும்” என்ற கருத்துகள் இணையத்தில் வைரலாகி சிரிப்பை வரவழைத்தன.
இருப்பினும், தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே மாநில அரசு சிறப்பு விடுமுறை குறித்து முடிவு எடுக்க முடியும் என, சில வலைத்தளவாசிகள் நினைவூட்டியதையும் பார்க்கக் முடிந்தது.
16-ஆவது ஜோகூர் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணி 56 தொகுதிகளில் 48 இடங்களை வென்று அமோக வெற்றிப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



