Latestஉலகம்

முதன் முறையாகப் பிரிட்டன் & வேல்சில் மிகவும் பிரபலமான ஆண் குழந்தைப் பெயராக ‘முஹமட்’

லண்டன், டிசம்பர்-7,பிரிட்டன் மற்றும் வேல்சில் மிகவும் பிரபலமான ஆண் குழந்தைப் பெயராக, வரலாற்றில் முதன் முறையாக ‘முஹமட்’ (Muhammad) தேர்வாகியுள்ளது.

கடந்தாண்டு அவ்விரு நாடுகளிலும் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளுக்குப் பெரும்பாலான பெற்றோர்கள் ‘முஹமட்’ என்ற பெயரையே வைத்துள்ளனர்.

அவ்விரு நாடுகளிலும் மொத்தமாக 4,661 ஆண் குழந்தைகளுக்கு ‘முஹமட்’ என பெயரிடப்பட்டது.

இங்கிலாந்தின் தேசிய புள்ளிவிவரத் துறையின் தகவல்படி, முதலிடத்தைப் பிடித்திருப்பதன் மூலம் இதுநாள் வரை முன்னணியிருந்த ‘நோவா’ (Noah) என்ற பெயரை ‘முஹமட்’ பின்னுக்கு தள்ளியுள்ளது.

2022-ஆம் ஆண்டில் ‘முஹமட்’ இரண்டாமிடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறையை ஒரே ஓசையைக் கொண்ட ஆனால் எழுத்துகள் மாறுபட்ட ‘மொஹமெட்’ (Mohamed) போன்ற பெயர்களை அவ்வெண்ணிக்கை உள்ளடக்கவில்லை.

பிரிட்டன், வேல்ஸ் நாடுகளில் ‘முஹமட்’ மற்றும் ‘மொஹமெட்’ போன்ற பெயர்களுக்கு ஏன் இவ்வளவு மவுசு என்பதற்கான உறுதியான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை.

ஆனால், அங்கு அதிகரித்து வரும் முஸ்லீம் சமூகத்தின் எண்ணிக்கை மற்றும் அப்பெயர்களின் ஆதிக்கம் கூட அதற்குக் காரணமாக இருக்கலாமென புள்ளிவிவரத் துறை கூறியது.

உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களான மறைந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி (Muhhamad Ali), தற்போதைய லிவர்பூல் கோ மன்னன் மொஹமட் சலா (Mohamed Salah), மற்றும் மராத்தோன் ஓட்டக்காரர் மொஹமட் (மோ) ஃபரா (Mohamed Mo Farah) போன்றவர்களும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் தேசிய புள்ளிவிவர அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வேளையில், பெண் குழந்தைகளுக்கான மிகவும் பிரபலமான பெயராக ‘ஒலிவியா'(Olivia) தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!