
கோலாலம்பூர், ஏப் 10 – முன்னாள் துணைத் தலைவர் ரபிசி ரம்லி மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் கட்சி உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டுமென பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாறாக நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் பிரச்னைகளில் கவனம் செலுத்த விரும்புவதாக பிரதமருமான அன்வார் தெரிவித்தார்.
தனிப்பட்ட விவகாரத்தைவிட பொருளாதாரத்தை பாதிக்கும் பிரச்னைகள் தீவிரமானவை என அவர் சுட்டிக்காட்டினார்.
பாண்டானில் உள்ள KG செராஸ் பாருவில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்துகொண்ட பிறகு அன்வார் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் கட்சியின் துணைத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்து, பொருளாதார அமைச்சர் பதவியைத் துறந்ததிலிருந்து,பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி கட்சியை பலவீனப்படுத்துவதாகக் குற்றம் சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐந்து நாட்களுக்கு முன் பி.கே.ஆர் மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர் A.குமரேசன் கட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
கட்சித் தலைமைக்கு எதிராகத் தான் கூறிய பல கருத்துக்களை தற்காத்துப் பேசிய ரபிசி முதலில் , தன்னை கட்சியிலிருந்து நீக்குமாறு இன்று பி.கே.ஆருக்கு சவால் விடுத்தார்.



