கான்பூர், அக்டோபர் 9 – உத்தரப்பிரதேசத்தில், டைம் மிஷின் மூலமாக, முதுமையை இளமையாக மாற்றுவதாகப் பொய் வாக்குறுதி அளித்து, 18 மில்லியன் ரிங்கிட்டை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரைச் சேர்ந்த தம்பதியர் ஒருவர், இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட டைம் மிஷின் எனக் கூறி, மோசடி செய்து வந்தது அம்பலமாகியுள்ளது.
டைம் மிஷினுக்குள் சென்றால் ஆக்சிஜன் தெரபி வழங்கப்படும் எனவும், அந்த தெரப்பியின் மூலம் இளமை திரும்பும் எனவும் பலரிடமும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர், இந்த தம்பதி.
கான்பூரில் சிகிச்சை மையம் திறந்து 4,600 ரிங்கிட்டிற்கு ஆக்சிஜன் தெரபி வழங்கியதோடு, மற்ற வாடிக்கையாளர்களை அழைத்து வரும் நபர்களுக்குத் தள்ளுபடியெல்லாம் தந்து மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், மோசடி செய்த தம்பதியைத் தேடி வருகின்றனர்.
வெளிநாட்டிற்கு அந்த தம்பதி தப்பியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.