
கோலாலம்பூர், மார்ச் 19 – முஸ்லிம் மற்றும் இந்து சமூகங்களைப் பிரதிநிதிக்கும் அரசு சார்பற்ற அமைப்புகளின் அமைதி முயற்சியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார்.
அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுப்பதிலும், பிளவுகளை நிராகரிப்பதிலும், பரஸ்பர மரியாதையின் உணர்வை நிலைநிறுத்துவதிலும் மக்களின் முதிர்ச்சியை இந்த முயற்சிகள் பிரதிபலிப்பதாக அவர் வருணித்தார்.
கருணை, ஒற்றுமை மற்றும் இனங்களுக்கிடையிலான மரியாதை போன்ற
பண்புகள் உறுதியாக வேரூன்றிய நாடான மலேசியாவின் உண்மையான உணர்வை இந்த அமைதி முயற்சி உள்ளடக்கியுள்ளது என்று அன்வர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஒற்றுமையை நாம் தொடர்ந்து பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்பதோடு இதுவே நமது தேசத்தின் வலிமைக்கு அடித்தளமாகும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அன்வார் தெரிவித்தார்.
நேற்று புத்ரா ஜெயாவில் மதானி நல்லிணக்கத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற, பல தன்னார்வ அமைப்புகள் பங்கேற்ற கலந்துரையாடல் அமர்வின்போது, பிரச்னைகளைத் தீர்ப்பதில் ஒருமித்த கருத்தைக் காண்பதற்குப் பேச்சுவார்த்தையே வழியாக இருக்க வேண்டும் என்று பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதற்கிடையில், அமைதியான தீர்வை எட்டுவதற்கு இந்தக் கூட்டம் முக்கியமானது என்று மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் ஒருங்கிணைப்பு பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் கூறினார்.
இந்த கலந்துரையாடலில் முதல் சுற்று நிகழ்வில் மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கும் 20 பிரதிநிதிகளும் இந்தியர்களை பிரதிநிதித்து 10 பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக மலேசிய முஸலிம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலவர் டத்தோ ஜைனுல் ரிஜால் அபு பாக்கார் தெரிவித்தார்.
மாலை மூன்று மணிக்கு தொடங்கி நான்கு மணி நேரம் நீடித்த அந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முகமட் ஷம்ரி வினோத், செகு சந்திரா எனப்படும் எஸ் சந்திரசேகரன், பிரடவுஸ் வோங், , மற்றும் சந்தானர் துரோணாச்சாரியார் என அறியப்படும் குமரேசன் ஜோதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.



