
சென்னை, நவம்பர்-9, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி பெரும் வரவேற்புப் பெற்ற ‘அமரன்’ திரைப்படம் முஸ்லீம்களை மோசமாகச் சித்தரிப்பதாகக் கூறி, தமிழகத்தின் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நல்லிணக்கத்தைக் கெடுப்பதால் ‘அமரன்’ படத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி SDPI எனப்படும் இந்தியச் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 100 உறுப்பினர்கள் சாந்தி திரையரங்கின் வெளியே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸ்காரர்கள் தடுப்பு வேலிகள் அமைத்துப் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீஸ்காரர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதே போல், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள படத் தயாரிப்பாளர் நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் அலுவலகத்திலும் அக்கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.