Latestஇந்தியாஉலகம்மலேசியா

முஸ்லீம்களின் ‘கலிமா’ தெரிந்திருந்ததால் ஜம்மு – காஷ்மீர் பயங்ரவாதத் தாக்குதலில் உயிர் தப்பிய இந்து பேராசிரியர்

ஸ்ரீ நகர், ஏப்ரல்-24- இந்தியாவின் ஜம்மு – காஷ்மீரில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலின் போது, தான் ஒரு முஸ்லீம் என பயங்கரவாதிகளை நம்ப வைத்து உயிர் தப்பியுள்ளார் ஓர் இந்துவான பல்கலைக்கழகப் பேராசிரியர்.

சுற்றுப்பயணிகளை சுற்றி வளைத்த பயங்கரவாதிகள், முஸ்லீம் அல்லாதோரை கொல்வதற்காக அவர்களைத் தனிமைப் படுத்திக் கொண்டிருந்தனர்.

அதன் போது, இஸ்லாம் மீதான நம்பிக்கையின் பிரகடனமாகவும் கடவுளுக்கு விசுவாசமாக செயல்படுவதைக் குறிப்பதுமான ‘கலிமா’ வைச் சொல்லச் சொல்லி கேட்டுள்ளனர்.

‘கலிமா’வை ஓத முடியாதவர்கள் முஸ்லீம் அல்லாதவர்களாகக் கருதப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அப்போது மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த அசாம் பல்கலைக்கழகப் பேராசிரியர் தேபாஷிஷ் பட்டச்சார்யா, அருகிலிருந்த அனைவரும் ‘கலிமா’ ஓதுவதை கண்டார்.

சமயோசிதமமாக இவரும் உடனே சத்தமாக ‘கலிமா’ ஓத ஆரம்பித்தார்.

அப்போது அவரருகில் வந்த பயங்கரவாதி, பேராசிரியரை விட்டு விட்டு, ‘கலிமா’ ஓதாத ஒருவரை தலையில் சுட்டுக் கொன்றான்.

“நீ இங்கு என்ன செய்கிறாய்? ” என பயங்கரவாதி கேட்ட போது பட்டச்சார்யா இன்னும் சத்தமாக ‘கலிமா’ ஓதியதால், அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

பிறகு குடும்பத்தாருடன் அவர் தப்பி வந்தார்.

‘கலிமா’ ஓதுவது தெரிந்திருந்ததால் இன்று நான் உயிர் பிழைத்தேன் என பேராசிரியர் NDTV தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

உலககையே உலுக்கிய அந்த பயங்கரவாதத் தாக்குதலில் குறைந்தது 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவர், பயங்கரவாதிகளைத் தடுக்க போன உள்ளூர் முஸ்லீம் ஆடவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

அதே சமயம், தன் கணவரைச் சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளிடம் தன்னையும் கொன்று விடுமாறு ஓர் இந்து குடும்ப மாது கதறியச் சம்பவமும் தெரிய வந்துள்ளது.

ஆனால், கொடூர சிரிப்போடு, ” நீ பிழைத்துப் போ; போய் உன் பிரதமர் மோடியிடம் எங்களைப் பற்றி சொல்” என பயங்கரவாதிகள் கூறியதாக உயிர் தப்பிய அம்மாது கண்ணீருடன் கூறினார்.

இப்படி அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும் உயிர் தப்பியவர்களும் தாங்கள் சந்தித்து கொடூரங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அக்கதைகள் சமூக ஊடகங்களில் சோகத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த பயங்கரவாத கும்பலை நீதியின் முன் நிறுத்தி தக்க தண்டனை வாங்கித் தருமாறு கோரிக்கை வலுத்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!