
சிட்னி, டிசம்பர்-15 – ஆஸ்திரேலியா, சிட்னியில் உள்ள Bondi கடற்கரையில் யூதர்களின் கொண்டாட்டத்தை குறி வைத்து, மர்ம நபர்களான ஒரு தந்தையும் மகனும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 10 வயது சிறுமி உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய 50 வயது தந்தையை போலீஸார் சுட்டுக் கொன்றதால், மொத்த உயிரிழப்பு 16-ராக உயர்ந்துள்ளது.
Hanukkah விழா தொடங்குவதன் அடையாளமாக நேற்று யூதர்கள் ஒன்றுகூடிய அந்நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மேலும் 40 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் ஐவரது நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது.
போலீஸாரால் சுடப்பட்டு படுகாயமுற்ற இரண்டாவது சந்தேக நபரான 24 வயது மகன், முழு போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனை கொண்டுச் செல்லப்பட்டான்.
இதுவொரு தீவிரவாதத் தாக்குதல் என வகைப்படுத்திய போலீஸ், கடற்கரைக்கு அருகேயிருந்த ஒரு காரிலிருந்து மேம்படுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதையும் உறுதிப்படுத்தியது.
இதனைக் கொடூரத் தாக்குதல் என ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese கண்டித்துள்ளார்.
சுமார் 1,000 பேர் பங்கேற்ற நிகழ்வில் தாக்குதல்காரர்கள் இருவரும், கண்ணில் கண்டோரை எல்லாம் கண்மூடித்தனமாக சுடும் பயங்கரமான காட்சிகள் முன்னதாக வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.



